மாணவர்களிடம் உள்ள வாசித்தல் முறையை மாற்றிட வேண்டும்


மாணவர்களிடம் உள்ள வாசித்தல் முறையை மாற்றிட வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2018 3:30 AM IST (Updated: 1 April 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

`மாணவர்களிடம் உள்ள வாசித்தல் முறையை மாற்றிட வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

செய்யாறு,

செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் வாசிக்க, எழுதிட தெரியாத மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பயிற்சி நடத்தப்பட்டது. இதனை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருச்சியை சேர்ந்த ஆசிரியர் ஜெயராமன் கருத்தாளராக கலந்து கொண்டு நடைமுறையில் உள்ள கற்பித்தல் குறைகளை நீக்கி மாணவர்களுக்கு கற்கும் ஆர்வமும், நினைவில் வைத்து கொள்ள எளிய முறையில் பயிற்சி அளித்தார்.

நிறைவு விழாவில் முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பயிற்சி அனுபவங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வி.ஜெயக்குமார் கூறியதாவது.

கல்வி வளர்ச்சியில், தேர்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளது. இந்த நிலையை மாற்றிட கற்பித்தலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். மெல்ல கற்கும் மாணவர்கள் என யாருமில்லை, ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள வாசித்தல் முறையை மாற்றிட வேண்டும்.

மாணவர்களின் அடிப்படை பிரச்சினையை கண்டறிந்து அதனை ஆசிரியர்கள் தீர்க்க வேண்டும். 100 சதவீதம் தமிழில் வாசித்தல் என்கிற நிலையை வருகிற 19-ந்தேதி அடைந்து உலக சாதனையாக கின்னஸ் சாதனையில் இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் கா.கார்த்திகா, உதவி திட்ட இயக்குனர் சுப்பிரமணியன், வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story