வேட்புமனுவை பெற அதிகாரிகள் வராததால் கூட்டுறவு சங்கத்துக்குள் அலுவலர்களை வைத்து பூட்டி போராட்டம்


வேட்புமனுவை பெற அதிகாரிகள் வராததால் கூட்டுறவு சங்கத்துக்குள் அலுவலர்களை வைத்து பூட்டி போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 4:30 AM IST (Updated: 1 April 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனுவை பெற அதிகாரிகள் வராததால் பெருமகளூர் கூட்டுறவு சங்கத்துக்குள் அலுவலர்களை வைத்து பூட்டி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெட்டவயலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பெருமகளூரில் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு நேற்று பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வேட்புமனுவை பெற அதிகாரிகள் யாரும் காலை 10 மணிவரை வரவில்லை. இதனால் வேட்புமனு செய்ய வந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆத்திரம் அடைந்து முன்னாள் பேரூராட்சி தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், பெருமகளூர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் அலுவலர்களை உள்ளே வைத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சங்கத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அலுவலர்கள் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் ரெட்டவயல் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்காக வேட்புமனு பெற அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அஸ்வினி பார்த்தீபன் தலைமையில் ரெட்டவயல் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் ரெட்டவயல்- காலகம் ஆவுடையார் கோவில் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story