விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி: காப்பாற்ற முயன்ற தோழியும் உயிரிழந்த பரிதாபம்


விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலி: காப்பாற்ற முயன்ற தோழியும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 1 April 2018 3:45 AM IST (Updated: 1 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானாள். அவளை காப்பாற்ற முயன்ற தோழியும் பரிதாபமாக உயிரிழந்தாள்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் பாக்கியலட்சுமி (வயது 13). இவளும், அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் கீர்த்தி (14) என்பவளும் தோழிகள் ஆவர். இவர்களில் பாக்கியலட்சுமி, அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கீர்த்தி 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவிகள் இருவரும் தங்களது பெற்றோரிடம் அதே கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று துணிகளை துவைத்து குளித்து விட்டு வருவதாக கூறிச்சென்றனர். இவர்களுடன் அதே கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் மகள் பிரபாவதி(13) என்ற சிறுமியும் உடன் சென்றாள். இவர்கள் 3 பேரும் அங்குள்ள கந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்காக கிணற்றின் படிக்கட்டுகளில் இறங்கினர்.

அப்போது கிணற்றின் படிக்கட்டுகளில் பாசி படர்ந்திருந்ததால் எதிர்பாராதவிதமாக பாக்கியலட்சுமி வழுக்கி கிணற்றுக்குள் விழுந்தாள். நீச்சல் தெரியாததால் பாக்கியலட்சுமி தண்ணீரில் தத்தளித்தாள். இதை பார்த்த கீர்த்தி, உடனே தனது தோழியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தாள். இருவரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாவதி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினாள்.

இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றுக்குள் குதித்து 2 மாணவிகளையும் கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது மாணவி பாக்கியலட்சுமி, தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கீர்த்தியை மீட்டு உடனடியாக ரெட்டணை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கீர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 2 மாணவிகளின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவிகளின் உடலை பார்த்து அவர்களது பெற்றோர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தினால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Next Story