உப்பூர் அனல்மின்நிலையத்திற்கு கண்மாய் மண் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், 14 பேர் கைது


உப்பூர் அனல்மின்நிலையத்திற்கு கண்மாய் மண் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், 14 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2018 3:30 AM IST (Updated: 1 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு கண்மாய் மண்ணை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் உப்பூர் அனல் மின் நிலையத்தில் கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற. மேலும் இந்த மின் நிலைய வளாகத்தில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய உப்பூர் கண்மாயில் இருந்து கடந்த ஒரு வாரமாக மண் எடுத்து வரப்படு வதாக கூறப்படுகிறது. இந்த மண்ணை தனிநபர் ஒருவர் விவசாய பயன்பாட்டிற்கு என திருவாடானை தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெற்று அந்த மண்ணை அள்ளி அனல் மின் நிலையத்துக்கு விற்பனை செய்வதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாகனேந்தல், காவனூர் கிராம மக்கள் அனல் மின் நிலைய அதிகாரியிடம் இது பற்றி கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லையாம். இதனை தொடர்ந்து உப்பூர் அனல்மின்நிலையத்திற்கு கண்மாய் மண் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்துநேற்று காலை உப்பூர் அனல் மின் நிலையம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தன.மதிவாணன், காவனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தன் ஆகியோர் தலைமையில் நாகனேந்தல் கிராம தலைவர் பஞ்சவர்ணம், கிருஷ்ணன், திவாகரன், இந்திய தேசிய கட்சி நிர்வாகி பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து தன.மதிவாணன் கூறியதாவது:- ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் கீழ் உள்ள உப்பூர் பகுதியில் 52 பாசன வசதி பெறும் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய் பாசன வசதி பெறும் வரத்துக்கால்வாயை அனல் மின் நிலைய நிர்வாகம் மண்ணைக்கொண்டு மூடி வருகிறது. அனல் மின் நிலையத்துக்கு நாகனேந்தல், காவனூர், வளமாவூர், துத்தியேந்தல் மற்றும் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தியதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 6-ந்தேதி வர உள்ளது. அதுவரை வரத்துக்கால்வாய்களை மூடக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் விவசாய பயன்பாட்டிற்கு என அனுமதி பெற்று கண்மாய் மண்ணை அனல் மின் நிலையத்துக்கு விற்று வருகின்றனர். இதனை அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி திருவாடானை தாசில்தார் செல்வி கூறும்போது, கண்மாய்களை தூர்வாரவும், விவசாய பயன்பாட்டிற்கும் அரசு அனுமதியுடன் கண்மாயில் வெட்டு மண் எடுப்பதற்கு தனிநபர் பெயரில் அனுமதி வழங்கி வருகிறோம். விவசாய நிலங்களில் உள்ள மேடுபள்ளங்களை சமப்படுத்துவதற்காக அனுமதி பெற்று விட்டு அதனை வியாபார நோக்கில் யார் செயல்பட்டாலும் தவறுதான். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு கண்மாய் மண்ணை எடுப்பதற்கு யாருக் கும் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். 

Next Story