சுரங்கப்பாதை பணியால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: திண்டுக்கல்லில் பயணிகள் முற்றுகை போராட்டம்


சுரங்கப்பாதை பணியால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: திண்டுக்கல்லில் பயணிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே சுரங்கப்பாதை பணியால் 2 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் திண்டுக்கல்லில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்-கரூர் இடையேயான ரெயில் பாதை, ரூ.60 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. அதன்படி குஜிலியம்பாறை அருகே வடுகம்பாடி பாறைப்பட்டியில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி நேற்று நடந்தது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கியதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக சென்றன.

இதற்கிடையே மதியம் 1 மணிக்கு வந்த கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் குஜிலியம்பாறையை அடுத்த பாளையத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் 5½ மணி நேரம் அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் உணவு கிடைக்காமல் குழந்தைகள், பெண்கள் சிரமம் அடைந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும், அதன் டிரைவர்கள் நாகர்கோவில்-கோவை பயணிகள் ரெயிலுக்கு மாறுவது வழக்கம். ஆனால், கோவை-நாகர்கோவில் ரெயில் வருவதற்கு தாமதமானதால், திண்டுக்கல்லுக்கு மாலை 3 மணிக்கு வந்த நாகர்கோவில்-கோவை ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரெயில் புறப்படும் நேரம் குறித்து முறையான அறிவிப்பு எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர்கள், டிக்கெட் வழங்கும் இடம், ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்துக்கு சென்று ரெயில் புறப்படும் நேரம் குறித்து கேட்ட வண்ணம் இருந்தனர். பின்னர் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சிலர் அலுவலகத்துக்குள் சென்று, ரெயில் தாமதமாக புறப்படும் என்று முன்கூட்டியே ஏன் அறிவிக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ரெயில் புறப்படும் வரை மற்ற ரெயில்களை விடமாட்டோம் என்றும் கூறினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பயணிகள் சமரசம் அடையவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இரவு 8.20 மணிக்கு கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில், திண்டுக்கல்லுக்கு வந்தது. இதையடுத்து 5½ மணி நேரம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில்-கோவை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

முன்னதாக கேரள மாநிலம் பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் காலை 9.20 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. வாடிப்பட்டி அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், அந்த ரெயில் திண்டுக்கல்லோடு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பழனி பங்குனி உத்திர திருவிழாவுக்கு சென்று விட்டு, அந்த ரெயிலில் வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். அந்த ரெயிலில் மதுரை, விருதுநகரை சேர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அதில் சிலர் பஸ்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் 3 மணி நேரம் காத்திருந்து திருவனந்தபுரம்-மதுரை சிறப்பு ரெயிலில் சென்றனர். 

Next Story