இளம்பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் தலைமறைவு, 20-ந்தேதிக்குள் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவு


இளம்பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் தலைமறைவு, 20-ந்தேதிக்குள் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் தலைமறைவாக உள்ளார். அவரை 20-ந்தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மகள் சசிகலா (24). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சசிகலாவிற்கு, அவரது உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த வினோத், சசிகலாவை தனியாக பேச அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்தார். பின்னர் உடலை கற்பகம் கல்லூரி அருகே புறவழிச்சாலையில் புதைத்தார். இந்த சம்பவம் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வினோத்தை கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோவை மகிளா கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் வினோத் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி முதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது. பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் மதுரை, கிணத்துக்கடவு, பேரூர், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி ஆகிய இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் வருகிற 20-ந்தேதிக்குள் வினோத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை என்றால் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். 

Next Story