மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காதது ஏன்? மந்திரி ராமலிங்கரெட்டி கேள்வி


மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காதது ஏன்? மந்திரி ராமலிங்கரெட்டி கேள்வி
x
தினத்தந்தி 1 April 2018 3:00 AM IST (Updated: 1 April 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

பசுக்களை பாதுகாக்க பா.ஜனதாவினருக்கு ஆர்வம் இல்லை என்றும், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காதது ஏன்? என்றும் மந்திரி ராமலிங்கரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

பசுக்களை பாதுகாக்க பா.ஜனதாவினருக்கு ஆர்வம் இல்லை என்றும், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காதது ஏன்? என்றும் மந்திரி ராமலிங்கரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவினருக்கு ஆர்வம் இல்லை

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வருவோம் என்று, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது சட்டசபை தேர்தலுக்காக அமித்ஷா நடத்தும் நாடகம் ஆகும். பா.ஜனதா கட்சியினர் பசுக்களை பாதுகாப்போம் என்று பெயரளவில் மட்டுமே கூறி வருகிறார்கள். உண்மையிலேயே பசுக்களை பாதுகாக்க பா.ஜனதாவிருக்கு ஆர்வம் இல்லை. அதற்கான நடவடிக்கைகளையும் பா.ஜனதாவினர் எடுத்ததில்லை. அவ்வாறு அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருக்க வேண்டும்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு, உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 3-வது இடம் தான் கிடைத்தது. இதன் மூலமாகவே பசுக்களை பாதுகாப்பதில் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்திருப்பார்கள். குறிப்பாக 2015-16-ம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மத்திய அரசு ரூ.26 ஆயிரத்து 682 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

தடை விதிக்காதது ஏன்?

வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதை தடுத்தாலே 75 சதவீத பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து விட முடியும். இதனை செய்ய மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு முன்வரவில்லை. அதில், ஆர்வமும் காட்டவில்லை. கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால் பசுவதை தடை சட்டம் கொண்டு வருவோம் என்று கூறி வரும் அமித்ஷா, பா.ஜனதா ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்?. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஈடுபட்டு இருப்போர் பா.ஜனதாவினர் தான். இதை மறுக்க முடியுமா?.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பா.ஜனதாவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதனால் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்காமல் மத்திய அரசு உள்ளது. உண்மையில் பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களில் தான் அதிகளவு மாட்டிறைச்சி பதனிடும் கிடங்குகள் உள்ளன. ஆனால் பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்படும், பசுக்களை பாதுகாக்க பா.ஜனதாவினரால் தான் முடியும் என்று மக்களிடையே அமித்ஷா பொய் பேசி வருகிறார். ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காதது ஏன்?.

குற்றங்கள் குறைந்துள்ளது

கர்நாடகத்தில் பா.ஜனதாவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் பா.ஜனதாவினர் மாநில அரசு மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்களால் மட்டும் 22 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதுபற்றி பா.ஜனதாவினர் பேசாமல் இருப்பது ஏன்?. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசு எந்த விதமான பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பா.ஜனதாவினர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடி சம்பவங்களும், குற்றங்களும் குறைந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதாவினர் கூறும் பொய் குற்றச்சாட்டுகளை கர்நாடக மக்கள் நம்பமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story