மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து போராட வேண்டும் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து போராட வேண்டும் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 1 April 2018 3:30 AM IST (Updated: 1 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

காவிரி, ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு,

காவிரி, ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

டி.டி.வி. தினகரன் பேட்டி

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் ம.நடராஜன் மரணம் அடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி சிறையில் இருந்து 15 நாள் பரோலில் சசிகலா தஞ்சாவூருக்கு சென்றிருந்தார்.

கணவரின் இறுதி சடங்கில் கலந்த கொண்ட அவர் நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். கார் மூலம் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்த சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் வந்திருந்தனர். பின்னர், டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவுக்கு டெங்கு காய்ச்சல்


பெங்களூரு சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் சசிகலா வந்திருந்தார். 15 நாட்கள் தேவைப்படும் என்று நினைத்தோம். ஆனால் ம.நடராஜனின் இறுதி சடங்கு உள்ளிட்ட அனைத்து காரியங்களும் முடிந்து விட்டதால் 10 நாட்களுக்குள் அவர் சிறைக்கு திரும்பி வந்து விட்டார். கணவர் இறந்ததால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது சசிகலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருந்தபோதே அவர் டெங்கு, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது ரத்த பரிசோதனையில் தெரியவந்தது. பரோலில் இருந்த நாட்களில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது, டெங்கு காய்ச்சல் அதிகரித்திருப்பது தெரியவந்தது. இந்த காய்ச்சலுக்காக டாக்டர்கள் மருந்துகளை எழுதி கொடுத்துள்ளனர். சசிகலா டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பது தொடர்பான மருத்துவ சான்றிதழையும் டாக்டர்கள் அளித்துள்ளனர். அதனை சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளோம். டாக்டர்களின் அறிவுரைப்படி தகுந்த நேரத்தில் சசிகலாவுக்கு மருந்துகள் வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.

மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக தேர்தல் நடத்தை விதிமீறலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று ஏற்கனவே கூறி இருந்தேன். கர்நாடக தேர்தல் முடிந்த பின்பும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிறார்களா? என்பது தெரியவில்லை.

தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினையாக இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் காலஅவகாசத்தை மத்திய அரசு கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தால் தமிழக மக்கள், மத்திய அரசு மீது கோபத்தில் உள்ளனர். இதனால், மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரியும். அதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை.

மக்கள் பிரச்சினைக்கு ஒன்றிணைய வேண்டும்

காவிரி பிரச்சினைக்காக வருகிற 3-ந் தேதி தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சி உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள். இதில் தங்களை கடவுளுக்கு நிகராக நினைத்து கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் எப்படி கலந்து கொள்வார்கள்?. இவர்கள் கலந்து கொண்டால் பூமியில் உள்ள மக்களுக்கு உணவு கிடைக்காதது போல் செயல்படுகிறார்கள். இந்த உண்ணாவிரதத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையும் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. ஒருவேளை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டால் ஆட்சியை கலைத்துவிடுவார்களோ என்ற பயம் அவர்களிடம் உள்ளது.

காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் அரசியல் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து மக்கள் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போது தான் தமிழகத்துக்கு வெற்றி கிடைக்கும். தேர்தல் நேரத்தில், தேர்தல் அரசியலை அரசியல் கட்சிகள் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story