வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய சித்தராமையா திட்டம் தீட்டுகிறார் குமாரசாமி கடும் தாக்கு


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய சித்தராமையா திட்டம் தீட்டுகிறார் குமாரசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 1 April 2018 3:15 AM IST (Updated: 1 April 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு விடுதிகளில் தங்கியிருந்து வாக்காளர்களுக்கு எப்படி பணப்பட்டுவாடா செய்வது என்று முதல்-மந்திரி சித்தராமையா திட்டம் தீட்டுவதாக குமாரசாமி கடுமையாக தாக்கி பேசினார்.

சிக்கமகளூரு,

சொகுசு விடுதிகளில் தங்கியிருந்து வாக்காளர்களுக்கு எப்படி பணப்பட்டுவாடா செய்வது என்று முதல்-மந்திரி சித்தராமையா திட்டம் தீட்டுவதாக குமாரசாமி கடுமையாக தாக்கி பேசினார்.

குமாரசாமி பேச்சு

தாவணகெரே மாவட்டம் ஜகலூரில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ‘விகாச யாத்திரை‘ பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

நாங்கள் கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள விவசாயிகளை அரசு சார்பில் இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பி, அங்குள்ள அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் பயிற்சி அளிப்போம். மக்களின் வரிப்பணத்தை முதல்-மந்திரி சித்தராமையா கட்சி விளம்பரங்களுக்காக கோடிகணக்கான ரூபாயை செலவு செய்கிறார். அது மக்களின் வரிப்பணம் என்பதை அவர் மறந்து விடக் கூடாது. அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி நீங்கள் (மக்கள்) கர்நாடக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். மாநிலத்தில் நல்லாட்சி அமைய மக்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். கர்நாடகத்தில் அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது 6½ கோடி மக்களின் கையில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சித்தராமையா மீது தாக்கு

முன்னதாக ஜகலூர் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா ரெசார்ட்டு அரசியல் நடத்துகிறார். அவர் போட்டியிட உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக ரெசார்ட்டில் அமர்ந்து திட்டம் வகுக்கிறார். மேலும் மற்ற தொகுதிகளில் எப்படி பணப்பட்டுவாடா செய்யலாம் என்று அவர் திட்டம் தீட்டுகிறார். மேலும், மற்ற கட்சியை சேர்ந்தவர்களை ரெசார்ட்டுகளுக்கு அழைத்து பண ஆசை காட்டி காங்கிரசுக்கு இழுக்கிறார்.

மாநிலத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து விட்டதாக கூறும் சித்தராமையா, இதுவரை யாருடைய கடனையும் அவர் தள்ளுபடி செய்யவில்லை. சித்தராமையா மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். நான் மாநிலம் முழுவதும் சென்று கிராமங்களில் தங்கி மக்களின் குறைகளை கேட்டு வருகிறேன். இதனால் விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். ஆனால் காங்கிரசும், பா.ஜனதாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். ராகுல்காந்தியும், மோடியும் மாறி மாறி கர்நாடகத்திற்கு வந்து சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் என்ன என்பது தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story