திருப்பூர் மண்ணரையில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் மண்ணரையில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டு மண்ணரை பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏற்கனவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக மாநகராட்சியால் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும் தினமும் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்காக தினமும் வீடு ஒன்றுக்கு ரூ.70 வரை குடிநீருக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே முறையாக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று கூறி அந்த பகுதியில் உள்ளவர்கள் ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் செங்கப்பள்ளி சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமானோர் அந்த பகுதியில் கூடினார்கள். பின்னர் திடீரென அவர்கள் ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரை பகுதியில் உள்ள பிரதான ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பிற பகுதிகளுக்கு சுமார் 2 மணிநேரம் வரை மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் பகுதிக்கு 45 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் எங்கள் பகுதிக்கு வினியோகிக்கப்படாமலே இருந்து வருகிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கியே உபயோகப்படுத்தி வருகிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வருகின்றனர். இதனால் உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில் குடிநீர் முறையாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story