பல்லடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது


பல்லடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2018 3:50 AM IST (Updated: 1 April 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்,

கோவை மாவட்டம் செஞ்சேரிமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 41). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள பொள்ளாச்சி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த பங்கில் கடந்த மாதம் 6-ந்தேதி இரவு செஞ்சேரிமலை அருகே உள்ள வடவேலம்பட்டியை சேர்ந்த மந்திராசலம்(25), அங்கமுத்து(24), சந்திரன்(21), அருண்(21) ஆகியோர் இரவு பணியில் இருந்தனர்.

நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு ஒரு வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊழியர்கள் 4 பேரும், அங்குள்ள அலுவலக அறைக்கு சென்று படுத்து தூங்கினர். பின்னர் 1½ மணி அளவில் ஒரு மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் பெட்ரோல் பங்குக்கு வந்தனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்கள். அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாததால், அலுவலக அறையை நோக்கி 2 பேரும் சென்றனர்.

ரூ.55 ஆயிரம் கொள்ளை

அங்கு ஊழியர்கள் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த ஒரு வாலிபர் அலுவலக அறைக்குள் புகுந்து, மேஜையில் இருந்த பணப்பையை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். அந்த பையில் ரூ.55 ஆயிரம் இருந்தது. அதற் குள் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் கண்விழித்த போது, ஒரு வாலிபர் அலுவலக அறைக்குள் இருந்து பணப்பையுடன் ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பதறி அடித்து எழுந்த ஊழியர்கள், வெளியே ஓடிவந்த போது, அங்கிருந்து 2 மர்ம ஆசாமிகளும் தப்பி ஓடினார்கள். ஊழியர்கள் துரத்திச்சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை மட்டும் அங்கேயே விட்டுச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சப்-இன்ஸ்பெக்டர் தவசியப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 2 வாலிபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் திருப்பூர் எஸ்.வி.காலனியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை 2 வாலிபர்கள் தான் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. அத்துடன் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம வாலிபர்களை தேடிவந்தனர்.

2 வாலிபர்கள் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பல்லடம் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த சந்திரனின் மகன் விஜய்(24) என்பதும், திருப்பூர் ஆஷர்மில் பகுதியை சேர்ந்த சரவணக்குமாரின் மகன் சூர்யா(21) என்பதும், இவர்கள் 2 பேரும்தான் ரவிக்குமாரின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

அத்துடன், 2 பேர் மீதும் திருப்பூர் மாநகரில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் ஆகிய போலீஸ்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும், இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், இருவரும் கடந்த 4-ந்தேதி தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து விஜய், சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்தும் கொள்ளைபோன பணத்தில் ரூ.2 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டது. 

Next Story