திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தொண்டி,
திருவாடானை தாலுகா மற்றும் தொகுதியின் தலைநகராக விளங்கி வருகிறது. ஆனால் திருவாடானை இன்னும் கிராம ஊராட்சியாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த நகரின் வளர்ச்சி மிகவும் பின் தங்கியுள்ளது.
இங்கு தாலுகா அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கருவூலம், மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், தாலுகா மருத்துவமனை, அரசு கல்லூரி மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தாலும் குடிநீர், சாலைகள், தெரு விளக்குகள், பொது சுகாதாரம் போன்ற பல்வேறு நிலையில் இந்த நகரம் இன்னும் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொகுதியின் தலைநகராக உள்ள சில ஊர்கள் மட்டும் இன்னும் கிராம ஊராட்சியாக இருப்பது போல் திருவாடானையும் கிராம ஊராட்சியாகவே இருந்து வருகிறது.
கல்லூர் ஊராட்சியில் உள்ள மகாலிங்கபுரம், பாரதிநகர் போன்ற பகுதிகளை திருவாடானை ஊராட்சியுடன் இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் நகராட்சி சட்டம் அமலுக்கு வரும் வரி விதிப்புகள் அதிகம் ஆகும்.
இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். மேலும் அரசின் மானியம் மற்றும் நிதி அதிகஅளவில் கிடைக்கும். இதன் மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பட வாய்ப்பு உள்ளது. மின்சாரம், சாலை, குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் அரசின் நிதிகளை எதிர்பார்க்காமல் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.