காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: புதுவையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம், அரசியல் கட்சிகளுக்கு நாராயணசாமி அழைப்பு


காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: புதுவையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம், அரசியல் கட்சிகளுக்கு நாராயணசாமி அழைப்பு
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.

புதுச்சேரி,

காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதற்கான காலக்கெடு கடந்த 29-ந் தேதி முடிந்த நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே கடந்த 26-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காலக்கெடு முடிவதற்குள் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் புதுவை அரசு சார்பில் மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க புதுவை அரசு சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் ஜெயராம் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்து அடுத்து எந்தவிதமான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

இதற்கிடையே காவிரி பிரச்சினை தொடர்பாக வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story