காதலனை திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பினார்


காதலனை திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 2 April 2018 4:25 AM IST (Updated: 2 April 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகால் டவுனில், பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்ததால் வீட்டில் இருந்து மாயமான இளம்பெண், காதலனை திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா அடேயனஹள்ளி கிராமத்தை சோந்தவர் மகாதேவா. இவருடைய மகள் புஷ்பலதா(வயது 23). மண்டியாவில் தங்கி நர்சிங் படித்துவிட்டு அடேயனஹள்ளியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பலதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாதேவப்பா தனது மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து மஞ்சுநாத் தனது மகளை காணவில்லை என கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம்(மார்ச்) 25-ந்தேதி புஷ்பலதா அடேயனஹள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்ப வந்தார். வீட்டில் இருந்து வெளியேறிய புஷ்பலதா தனது காதலரான குருராஜை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது காதல் கணவருடன் வீடு திரும்பினார்.

இதையடுத்து மகாதேவப்பா புஷ்பலதாவை கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தன்னுடைய மகள் கிடைத்துவிட்டதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மண்டியாவில் நர்சிங் படித்து கொண்டு இருக்கும் போதே குருராஜிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிப்பு முடிந்து புஷ்பலதா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது புஷ்பலதாவுக்கு அவருடைய வீட்டில் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பலதா தனது காதல் விஷயம் குறித்து பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடினர். இதனால் மனமுடைந்த புஷ்பலதா சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி காதலரான குருராஜூவை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தானும், தனது கணவரும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தான் செய்த தவறுக்கு மன்னித்து விடுமாறும் புஷ்பலதா போலீஸ் நிலையத்தில் வைத்து தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். அதையடுத்து போலீசார் இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story