தாராவி சிவசேனா தலைவர் முத்துராமலிங்கம் திடீர் மரணம்


தாராவி சிவசேனா தலைவர் முத்துராமலிங்கம் திடீர் மரணம்
x
தினத்தந்தி 2 April 2018 5:05 AM IST (Updated: 2 April 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

தாராவி சிவசேனா தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் திடீர் மரணம் அடைந்தார்.

மும்பை,

மும்பையில் சிவசேனா கட்சியின் தாராவி தாலுகா தலைவராக இருந்தவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம். இவரது மனைவி மாரியம்மாள். கடந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது, மாரியம்மாள் தாராவி 187-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.

சிவசேனா கட்சியின் தாராவி தாலுகா துணைத் தலைவராக இருந்த பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் தாராவி தலைவராக கட்சி தலைமையால் நியமிக்கப் பட்டார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49. பி.எஸ்.கே.முத்துராமலிங்கத்தின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பி.எஸ்.கே.முத்து ராமலிங்கத்தின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் ஆகும். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இளம் வயதிலேயே பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் சிவ சேனாவில் சேர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

பி.எஸ்.கே.முத்து ராமலிங்கத்தின்மறைவுக்கு தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம், மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை, திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை, பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கம், மராட்டிய தமிழர் நலக்கூட்டமைப்பு, மராட்டிய மாநில தமிழ்ச்சங்கம், மராட்டிய மாநில டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், தாராவி ஸ்ரீகணேசர் ஆலய கமிட்டி, கருமாரியம்மன் கோவில், தருண் பாரத் சேவா சங்கம், மராட்டிய மாநில அ.தி.மு.க., ஓம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்து உள்ளன.

Next Story