காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் ஈரோட்டில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சி தொண்டர்கள் தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு நேற்று காலை ஒன்று திரண்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட செயலாளார் குமரகுருபரன் தலைமை தாங்கினார். இவர்கள் திடீரென தலைமை தபால் அலுவலக கதவை இழுத்து தாங்கள் கொண்டு வந்த பூட்டால் பூட்டினார்கள்.
இதனால் உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம். அமைத்திடு, அமைத்திடு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் தபால் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்தனர். 8 பெண்கள் உள்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த சாவியை வாங்கி தலைமை தபால் அலுவலக கதவை திறந்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பஸ்சில் ஏற்றி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஈரோடு காந்திஜி ரோட்டில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story