ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை நகரசபை அதிகாரிகள் 2 பேர் கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை நகரசபை அதிகாரிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2018 4:00 AM IST (Updated: 3 April 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரசபை சார்பில் சொக்கலிங்கபுரம் நேதாஜிரோட்டில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ‘பேவர்பிளாக்‘ எனப்படும் தளஓடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனை சோமசுந்தரம் என்பவர் மேற்கொண்டார். பணி நிறைவடைந்த நிலையில் அவருக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்தது.

இதனை வழங்கிட நகரசபை ஆணையர் பொறுப்பை வகிக்கும் நகரசபை பொறியாளரான முத்து (வயது54) ரூ.28 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு சோமசுந்தரம் மறுக்கவே ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து திரும்பிய சோமசுந்தரம் பின்னர் இதுகுறித்து விருதுநகரிலுள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோரின் ஏற்பாட்டின்படி நேற்று மாலை சோமசுந்தரம் நகரசபை அலுவலகத்துக்கு ரூ.25 ஆயிரத்துடன் சென்றார். அங்கு பணத்தை கொடுத்தபோது நகரசபை ஆணையர் முத்துவும் அவருக்கு உடந்தையாக இருந்த நகரசபை கணக்கு அலுவலர் தியாகராஜனும்(52) லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரிடமும் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையராக இருந்த முத்துவெங்கடேஸ்வரன் ஒரு வருடத்துக்கு முன்பு தங்கியிருந்த குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் பொறியாளரான முத்து ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

இவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூராகும். கைதான தியாகராஜன் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர்.

Next Story