பாம்பன் ரெயில் பாலத்தில் சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும், அதிகாரி தகவல்


பாம்பன் ரெயில் பாலத்தில் சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும், அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 April 2018 3:15 AM IST (Updated: 3 April 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில்வே பாலத்தில் சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டப்பட்டு அதன் மீது 145 இரும்பு உத்திரம், தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் ரெயில்கள் சென்று வருகின்றன.

கடலுக்குள் அமைந்துள்ளதோடு,105 ஆண்டுகளை கடந்துள்ள இந்த பாலத்தின் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 இரும்பு உத்திரங்கள் (கர்டர்கள்) புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதை தொடர்ந்து கர்டர்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அதற்காக அரக்கோணம் ரெயில்வே தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட 4 இரும்பு உத்திரங்கள் லாரி மூலம் பாம்பன ரெயில் நிலையம் கொண்டுவரப்பட்டு கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் ரெயில்வே பாலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு அகல ரெயில்பாதை பாலமாக மாற்றும்போது மீட்டர் கேஜ் பாதையில் இருந்த 98 இரும்பு உத்திரங்கள் அகல பாதைக்காக மாற்றப் பட்டன. தற்போது மேலும் 27 இரும்பு உத்திரங்கள் புதிதாக மாற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.

அதற்காக மத்திய அரசு ரெயில்வே துறைக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது.அதை தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே தொழிற் சாலையில் இரும்பு உத்திரங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் பாலத்தில் புதிய இரும்பு உத்திரங்கள் பொருத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. புதிதாக ஒரு இரும்பு உத்திரத்தை பொருத்த குறைந்த பட்சம் 3 மணி நேரம் தேவைப்படும் என்பதால் ரெயில்கள் செல்லாத நேரத்தில் இந்த பணிகளை செய்ய திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பாலத்தில் சீரமைப்பு பணிக்காக கேன்ட்ரி என்று சொல்லக்கூடிய கிரேன் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 

Next Story