காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் இன்று கடைகள் , ஓட்டல்கள் அடைப்பு, வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் இன்று கடைகள் , ஓட்டல்கள் அடைப்பு, வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 2 April 2018 10:15 PM GMT (Updated: 2 April 2018 7:42 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்படுகிறது. மேலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கோவை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அமைக்கக்கோரியும் தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட உணவகங்கள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள 700 ஓட்டல்கள் மற்றும் 1,300 பேக்கரி கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை நாளை (இன்று) மூடப்பட்டு இருக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் இருதய ராஜா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய மளிகை கடைகள் என மொத்தம் 1 லட்சம் கடைகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டு இருக்கும்.

கோவை மாநகரில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், உக்கடம் ராமர்கோவில் மார்க்கெட், டி.கே. மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். இந்த போராட்டத்தில் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும். இந்த போராட்டத்தில் அனைத்து வக்கீல்களும் கலந்து கொள்வார்கள் என்று கோவை வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் மாணிக்கம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகிற 11-ந்தேதி வருகிறார். அப்போது மாவட்டத்தில் உள்ள கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே நாளை (இன்று) நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை. எங்களது சங்கத்தில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, கோவையில் நகைக்கடைகள் எதுவும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்படாது. வழக்கம்போல் நகைக்கடைகள் திறந்து இருக்கும் என்றனர்.

இந்த நிலையில் கோவையில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை காந்திபுரம் பஸ்நிலையம், சிங்காநல்லூர் பஸ்நிலையம், உக்கடம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கோவை ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு,ஆர்.எஸ்.புரம். உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தாலுகாவில் மட்டும் அரிசி கடைகள், மளிகை கடைகள், நகை கடைகள், ஜவுளி கடைகள், தள்ளுவண்டிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்பட 1200 கடைகள் உள்ளன. இது தவிர 50 உணவகங்களும் உள்ளன. வால்பாறை தாலுகாவில் ஓட்டல்கள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள் உள்பட வணிக நிறுவனங்கள் 710 உள்ளன. இன்று நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுகின்றன.

இதுபோல் மருந்து வணிகர் சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துகடைகள் மூடப்படுகின்றன. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகாவில் உள்ள 226 மருந்து கடைகள் மூடப்படுகின்றன. அதே நேரத்தில் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரிகளில் உள்ள மருந்து கடைகள் வழக் கம் போல் செயல்படும் என்று மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story