காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 48 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 48 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2018 3:15 AM IST (Updated: 3 April 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் நேற்று காலை கட்டபொம்மன் சிலை அருகே கூடினார்கள். பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கோ‌ஷம் போட்டு கொண்டு ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களை ரெயில் நிலையம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மறியலுக்கு முயன்றதாக பன்னீர்செல்வம் உள்ளிட்ட 22 பேரை கைது செய்தனர்.

அதே போன்று திராவிடர் விடுதலை கழகம், ஆதித்தமிழர் கட்சி, தமிழ் தேச மக்கள் முன்னணி என பல்வேறு கட்சியினர், அமைப்பினர் சேர்ந்து ரெயில் மறியல் போராட்டம் செய்ய கட்டபொம்மன் சிலை அருகே கூடினார்கள். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் மணிஅமுதன் உள்ளிட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story