ஆதிதிராவிடர்களுக்கான சமூக நீதியை மறுக்கும் பா.ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ஆதிதிராவிடர்களுக்கான சமூக நீதியை மறுக்கும் பா.ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர்களுக்கான சமூகநீதியை மறுக்கும் பா.ஜனதா அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், ஆதிதிராவிடர்களுக்கான சமூகநீதியை மறுக்கும் பா.ஜனதா அரசை கண்டித்தும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் பொன்.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் வயலூர் ராமநாதன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராம்பிரசாத், யோகானந்தம், வட்டார தலைவர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், வக்கீல் மைனர், ரமேஷ், இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

ரெயிலடியில்...

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ், ஜேம்ஸ், ஜான்சன், பட்டதாரி அணி மாநில செயலாளர் லட்சுமிநாராயணன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story