காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்துஆட்டையாம்பட்டி, எடப்பாடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஆட்டையாம்பட்டி, எடப்பாடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.முருகபிரகாஷ் முன்னிலை வகித்தார். சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், பாரப்பட்டி சுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.சிவலிங்கம், முன்னாள் தலைவர் ஸ்ரீராம், வீரபாண்டி ஆர்.அருள், சேலம் டி.மாணிக்கம் மற்றும் நைனாம்பட்டி, சென்னகிரி, மருளையம்பாளையம், எஸ்.பாப்பாரப்பட்டி உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான தி.மு.க.வினர் இதில் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார், மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன், நகர செயலாளர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது பஸ் நிலையத்திற்குள் இருந்த தி.மு.க. தொண்டர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவரை கலைந்து செல்ல இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த தி.மு.க. பிரமுகரின் சட்டை கிழிந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம். செல்வகணபதியிடம் தெரிவித்தனர், அவர்கள் உடனடியாக பஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை கண்டித்து சாலைமறியல் செய்தனர். தகவல் அறிந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் விரைந்து வந்து தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, பரமசிவம், ரவிசந்திரன், நிர்மலா, நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story