5 மாதங்களுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் பொது கழிவறை


5 மாதங்களுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் பொது கழிவறை
x
தினத்தந்தி 3 April 2018 4:00 AM IST (Updated: 3 April 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 5 மாதங்களுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் பொது கழிவறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுகாதார இயக்கத்தின் சார்பில் ரூ.6 லட்சத்தில் 2012-ம் ஆண்டு சமுதாய சுகாதார வளாக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக இலவச பொது கழிவறைகள் உள்ளன.

இந்த கழிவறை கட்டிடத்தின் அருகில் வங்கி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரந்தோறும் புதன்கிழமைகளில் இங்கு வாரச்சந்தையும் நடைபெறுகிறது. இந்த சந்தையில் பொருட்கள் வாங்க சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

இதனால் கடம்பத்தூர் மக்கள் மட்டுமின்றி கடம்பத்தூர் ரெயில் நிலையம் வரும் பயணிகள், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வாரச்சந்தை, வங்கி மற்றும் கடைகளுக்கு வருபவர்கள் அனைவருமே இந்த பொது கழிவறையை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததாலும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்த பொது கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது.

இதனால் ரெயில் பயணிகள், வாரச்சந்தை, வங்கி மற்றும் கடைகளுக்கு வருபவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த கழிவறை கட்டிடத்தின் முன்புறம், அந்த பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பழைய ராட்சத இரும்பு குழாய்களை போட்டு வைத்து உள்ளனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பயன்பாடு இல்லாமல் கிடக்கும் இந்த கழிவறையை முறையாக சீரமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்திகொடுத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். தொடர்ந்து கழிவறையை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story