நெற்குப்பை கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டுச் சீட்டை கிழித்ததால் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே வாக்குவாதம்


நெற்குப்பை கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டுச் சீட்டை கிழித்ததால் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது ஓட்டுச் சீட்டை கிழித்ததால் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பத்தூர்,

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 31-ந்தேதி வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் பெருமாள், அ.தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியன் உள்பட 18 பேர் களத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2,672 வாக்காளர்கள். அதில் 1,188 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை 3 பெட்டிகளில் வைத்திருந்தனர். நேற்று காலை போலீசார் பாதுகாப்புடன் வேட்பாளர்கள் முன்னிலையில் அதிகாரிகள் முதலாவது பெட்டியை திறந்து வாக்குகளை எண்ண தொடங்கினர். 59 வாக்குகள் எண்ணிய நிலையில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. பின்னர் 60-வது வாக்கு எண்ணும்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டுச் சீட்டை பறித்து கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் தேர்தல் அதிகாரி சுரேஷ், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகளை ஒரு அறையில் வைத்து அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர். வாக்கு எண்ணிக்கை மறுதேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாணிக்கம் தலைமையில் தி.மு.க. வினர் கூட்டுறவு சங்கம் முன்பு அமர்ந்து ஓட்டுச் சீட்டை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story