காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:45 AM IST (Updated: 4 April 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் நகர தலைவர் கெம்பையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊட்டி தொகுதி செயலாளர் கட்டாரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மஞ்சூர் பஜாரில் கணேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் ஜே.பி.சுப்ரமணியன், மாவட்ட தி.மு.க. அவை தலைவர் ஜி.பில்லன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு, கீழ்குந்தா பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.சின்னான், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் இத்தலார் சுரேஷ், நேரு மற்றும் தி.மு.க. காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

குன்னூர் பழைய லாரி நிலையத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதில், நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், உதயதேவன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோத்தகிரியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எக்ஸ்போ செந்தில் தலைமையில் மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் இலித்துறை ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் அப்துல் ரகுமான், சளிவயல் சாஜி, அம்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி குஞ்சு முகமது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், குணசேகரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பந்தலூரில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூடலூர் திராவிடமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ராஜேந்திர பிரபு, மகேசன், கம்யூனிஸ்டு நிர்வாகி கணேசன், முஸ்லிம் லீக் நிர்வாகி அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story