கந்துவட்டி கொடுமையால் டாஸ்மாக் விற்பனையாளர் தற்கொலை


கந்துவட்டி கொடுமையால் டாஸ்மாக் விற்பனையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 4 April 2018 5:00 AM IST (Updated: 4 April 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் டாஸ்மாக் விற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி கணபதி நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு ரகுநாத் (22) என்ற மகன் உள்ளார். மனோகரன் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மனோகரன், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கோபி என்பவரிடம் கடனாக பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கோபி, அடிக்கடி டாஸ்மாக் கடைக்கு சென்று மனோகரனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. கடந்த 3 நாட்களாக இரவு நேரம் டாஸ்மாக் கடைக்கு சென்ற கோபி, மது விற்பனையான பணத்தை மனோகரனிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட மனோகரன் விஷம் குடித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில், மனோகரன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மனோகரனின் மகன் ரகுநாத் ரெட்டியார்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கோபி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்துவட்டி கொடுமையால் டாஸ்மாக் விற்பனையாளர் மனோகரன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அனைத்து டாஸ்மாக் சங்கத்தினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி நேற்று, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை அடைத்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story