மத்திய அரசை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:00 AM IST (Updated: 4 April 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.- கூட்டணி கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,170 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடந்த 1-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டம் நேற்று 3-வது நாளாக நடந்தது.

விழுப்புரத்தில் தி.மு.க.வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக காந்தி சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கு காலை 11.25 மணிக்கு முதலாவது நடை மேடைக்கு வந்த சென்னை-குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் ராதாமணி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் முத்தையன், ஜெயச்சந்திரன், மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் குலாம்மொய்தீன், மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், ம.தி. மு.க. மாநில துணை செயலாளர் ஏ.கே.மணி, மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மாநில செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 750 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அவர்களை போலீஸ் வேன் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து 11.35 மணிக்கு புறப்பட்டுச்சென்றது.

தியாகதுருகம் ஒன்றிய, நகர தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் ஈயனூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பொன்ராமகிருஷ்ணன், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய துணைசெயலாளர் சாந்திகணேசன், மாவட்ட பிரதிநிதிகள் எத்திராசு, மலையரசன், தியாகை நெடுஞ்செழியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பொரசக்குறிச்சி மணி, செந்தில்குமார், பெருமாள், முன்னாள் கவுன்சிலர் அப்துல்கபூர், பொருளாளர் சுப்பு இளங்கோவன், அவைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சாமிதுரை, நிர்வாகிகள் ரமேஷ், மணிசேகர் உள்ளிட்ட 420 பேரை வரஞ்சரம் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கிருந்து 20 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

Next Story