காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 353 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 353 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி தபால் நிலையத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட உதயசூரியன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி உள்பட 75 பேரை கைது செய்தனர்.
மேல்மலையனூர் அருகே உள்ள அவலூர் பேட்டையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்துக்கு செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜவேலாயுதம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அவர்கள் அவலூர்பேட்டை-மேல்மலையனூர் சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் போட்டபடியே கடைவீதிக்கு வந்தனர். பின்பு மங்கலம்-கீழ் பெண்ணாத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட செஞ்சிமஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட 70 பேரை கைது செய்தனர்.
சின்னசேலம் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் கனகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 27 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய தி.மு.க. செயலாளர் முனியன் உள்பட 100 பேரை மூங்கில்துறைப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கெடிலத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், சங்கராபுரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 41 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் மொத்தம் 353 பேர் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். இதையொட்டி அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ் மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருப்பாலப்பந்தலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையிலும், பெரியசெவலை கூட்டுசாலை அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story