வெள்ளம்புத்தூர் மாணவன் கொலை வழக்கில் கைதான புவனகிரி வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்


வெள்ளம்புத்தூர் மாணவன் கொலை வழக்கில் கைதான புவனகிரி வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 4 April 2018 3:45 AM IST (Updated: 4 April 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளம்புத்தூர் மாணவன் கொலை வழக்கில் கைதான புவனகிரி வாலிபரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆராயி, அவரது மகள் தனம், மகன் சமயன் ஆகிய 3 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மாணவன் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கொலை செய்ததாக கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லைநாதனையும், இவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லைநாதன், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 81 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அரகண்டநல்லூர் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நேற்று முன்தினம் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் தில்லைநாதனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கடலூர் சிறையில் இருந்த தில்லைநாதனை திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், நந்தகோபால் மற்றும் போலீசார், போலீஸ் வேனில் பாதுகாப்புடன் அழைத்து வந்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, தில்லைநாதனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதோடு விசாரணை முடிந்து மீண்டும் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து தில்லைநாதனை அரகண்டநல்லூர் போலீசார் அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெள்ளம்புத்தூர், சைலோம் ஆகிய இடங்களில் 4 சம்பவங்களை தவிர விழுப்புரம் மாவட்டத்தில் வேறு எந்தெந்த பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர அவர் கடலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் வேறு எந்தெந்த மாவட்டங்களிலாவது, வெளி மாநிலத்திலாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story