காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 April 2018 4:00 AM IST (Updated: 4 April 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

கோவை,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

கோவை காந்திபுரத்தில் தமிழ்நாடு ஓட்டல் அருகில் இதற்காக நீண்ட பந்தல் அமைக்கப்பட்டு அ.தி.மு.க. வினர் காலை 8 மணிமுதல் குவியத்தொடங்கினார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க.வினர் சாரை,சாரையாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர். காலை 11 மணியளவில் உண்ணாவிரத பந்தல் நிரம்பி வழிந்தது. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கை அமைத்து உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டம் கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்றுள்ளது. காவிரி ஆறு, தமிழகத்தின் ஜீவாதாரமானது. மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றம், மேல்-சபைகளில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையை நடத்த விடாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடி வருகிறார்கள். இரு அவைகளும் முடங்கி கிடக்கின்றன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது. ராஜினாமா செய்யாமல் அவைகளில் தொடர்ந்து வற்புறுத்துவதன் மூலமே கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் சட்டரீதியான அணுகுமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வின் எழுச்சி மிகுந்த போராட்டம் காரணமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தபோது தேவையான நடவடிக்கை எடுக்காமல் இப்போது அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பலர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரத பந்தலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. கட்சி பிரமுகர்கள் தொண்டர்கள் உள்பட பலர் தலைவர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரிவாசு, எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, பொங்கலூர் தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், கே.பி.ராஜு, மகேஸ்வரி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. ஜப்பார், சி.டி.சி. சின்னராஜ், நா.கருப்புசாமி, டியூகாஸ் சுப்பையன், வால்பாறை அமீது, கோட்டூர் குணசீலன், சாரமேடு சந்திரசேகர், பீளமேடு துரை, தமிழ்முருகன், சிங்கைமுத்து கரிகாலன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

மாலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விவசாயிகள் சங்கத்தினர் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். 

Next Story