பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநாட்டில் அமித்ஷா பங்கேற்றார்


பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநாட்டில் அமித்ஷா பங்கேற்றார்
x
தினத்தந்தி 4 April 2018 2:48 AM IST (Updated: 4 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதா சார்பில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநாட்டில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேராததால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

ஹாவேரி,

கர்நாடக பா.ஜனதா சார்பில் ஹாவேரி மாவட்டம் காகினெலே என்ற இடத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். இதில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் வெயில் சுட்டெரித்ததால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேரவில்லை. மாநாட்டுக்கு வந்தவர்களும் பாதியிலேயே சென்ற வண்ணம் இருந்தனர்.

நாற்காலிகள் காலியாக இருந்தன. மாநாட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் செல்பவர்களை இருக்கையில் அமர வைக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தினார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் அமித்ஷா கடும் அதிருப்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய அமித்ஷா, ஆங்கிலேயர்களை போல் சித்தராமையா சாதிகளை உடைக்க முயற்சி செய்கிறார். இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

அதைத்தொடர்ந்து பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் உள்ள சிவயோகி மடத்திற்கு அமித்ஷா சென்றார். அங்கு குருபா சமூகத்தை சேர்ந்த மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமியை சந்திக்க அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த மடாதிபதி தாவணகெரேவுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து சிவயோகி மடத்தில் இருந்த இளைய மடாதிபதிகளை அமித்ஷா சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து பாதாமியில் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மடாதிபதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த கலந்துரையாடலை முடித்துக் கொண்டு அமித்ஷா அங்கிருந்த புறப்பட்டு சென்றார்.


Next Story