வாசிப்பை நேசிப்போம்!


வாசிப்பை நேசிப்போம்!
x
தினத்தந்தி 4 April 2018 3:48 PM IST (Updated: 4 April 2018 3:48 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய நவீன யுகத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.

முன்பெல்லாம், சிறு கதைகள், நாவல்கள், வார பத்திரிகைகளில் வரும் தொடர்களை விரும்பி படித்து வந்தனர். புத்தகங்கள், பத்திரிகைகள் மூலம் உலகத்தையும், நாட்டு நடப்பையும் தெரிந்துகொண்டனர். ஆனால், இன்றைக்கு இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வரும் கதைகள், தகவல்களை தான் பலரும் படிக்கிறார்கள். ஆனால், அவை நம் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை. புத்தகங்களில் படிக்கும் தகவல்கள் எப்போதும் நம்முடன் பயணிக்கும்.

அதிலும், இந்த காலத்து மாணவ பருவத்தினர் பலரும் பாடப்புத்தகங்களை தவிர வேறு எந்த புத்தகங்களையும் தொடுவதில்லை. இதனால், வாசிப்பு பழக்கம் படிப்படியாய் தொலைந்துகொண்டு இருக்கின்றது. மாணவர்கள் தமிழ்மொழியை படிக்கவே திணறுகின்றனர். புத்தகங்கள் குழந்தைகளுக்கு இன்றியமையாத பல உன்னத நலன்களை அளிக்க வல்லது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வை செம்மைப்படுத்தும், ரசிக்க தூண்டும், புத்திகூர்மை, அறிவை விஸ்தரிக்க உதவும், சமச்சீரான எண்ண ஓட்டம், சகிப்புத்தன்மை, எண்ணத்தில் உறுதி என்று புத்தகங்களின் நலனை அடுக்கிக்கொண்டே போகலாம். புத்தகத்தை திறப்பவன் அறிவு சுரங்கத்தின் வாயிலை திறக்கிறான். புத்தகங்கள் சிறந்த நண்பர்கள். நல்ல புத்தகங்களை படிக்கும்போது நல்ல சிந்தனைகள் தோன்றுகின்றன.

இளமையில் தான் மிகச் சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. எனவே, புத்தகம் படிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். புத்தகம் ஒன்றினை எடுத்து பெற்றோர்கள் படித்தால் குழந்தைகளும் படிக்க தொடங்கி விடுவார்கள். புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் வரும். பலவிதமான புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகங்கள் நம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். நம்மால் போக முடியாத இடத்திற்கு எல்லாம் புத்தகங்கள் நம்மை அழைத்து செல்லும்.

எப்படி, தென்னங்கன்று, பழமரக்கன்றுகளை நாம் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றினால் வளர்ந்து இளநீராகவும், பழங்களாகவும் பயன் தருவதைபோல சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் குழந்தைகள் வளர்ந்தபின் நல்ல பண்பாளர்களாக திகழ்வார்கள்.

-எம்.டி.ராஜ் 

Next Story