ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 4 April 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகள் பிரிவு, மருந்து வழங்கும் பிரிவு போன்ற இடங்களில் பார்வையிட்டார். மேலும் வினியோகம் செய்யப்படும் மாத்திரைகள் காலாவதியாகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார்.

பிறப்பு-இறப்பு பதிவு செய்யப்படும் பிரிவுக்கு சென்றார். அப்போது அங்கு இணையதளம் வசதி குறைபாடு இருப்பதால், பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதாக அலுவலர்கள் புகார் கூறினர். இதனை சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் நடந்து செல்வதற்கு ஏற்ற வகையில் சாய்தளம் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெறும் பெண்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். வசதிகள் குறைவாக உள்ள ரத்த வங்கியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுவதாக புகார் கூறினர். இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்துக்கு கலெக்டர் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். சுமார் 3 மணிநேத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். பின்னர் அங்கு இருந்து தேனிக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story