புதிய தமிழகம் கட்சி கொடிக்கம்பம் அகற்றம்: மறியலின் போது போலீசார் மீது கல்வீச்சு; இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம்


புதிய தமிழகம் கட்சி கொடிக்கம்பம் அகற்றம்: மறியலின் போது போலீசார் மீது கல்வீச்சு; இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 5 April 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைக்கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியலில் இறங்கினர். அப்போது போலீசார் மீது கல்வீசப்பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனியை அடுத்துள்ள கிராமம் சின்ன நாகலாபுரம். பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த 20 வருடமாக எந்த கட்சி கொடியும் சாதி அமைப்புகளின் கொடியும் கட்டப்படுவதில்லை. ஊர் கட்டுப்பாடாக கொடிக்கம்பம் இல்லாத நிலையில் கடந்த 31-ந் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கட்சி கொடியேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மற்றவர்கள் கலெக்டர் சிவஞானத்திடம் முறையிட்டனர். இதனால் கொடிக்கம்பத்தை அகற்ற வருவாய்த்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து சாத்தூர் கோட்டாட்சியர் மங்கள ராமசுப்பிரமணியன், தாசில்தார் சாந்தி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை சின்ன நாகலாபுரம் சென்று அங்கிருந்த புதிய தமிழகம் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டு சென்ற சுமார் 1 மணி நேரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியினர் ஒன்று திரண்டனர்.

கட்சியின் கிளை செயலாளர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று எச்சரித்த நிலையில் போலீசார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், ரங்கராஜ் மற்றும் போலீஸ்காரர் ரமேஷ்குமார் ஆகியோர் காயம் அடைந்தார்கள். 4 பேரும் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதனைதொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு சாலை மறியலை கைவிடச்செய்தனர். தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் அங்கு விரைந்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர்.

அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story