சிறுவர்-கர்ப்பிணிகள் வெயில் நேரத்தில் வெளியே வர வேண்டாம் கலெக்டர் வெங்கடேஷ் அறிவுறுத்தல்


சிறுவர்-கர்ப்பிணிகள் வெயில் நேரத்தில் வெளியே வர வேண்டாம் கலெக்டர் வெங்கடேஷ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் சிறுவர், கர்ப்பிணிகள் வெயில் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி, 

கோடை காலங்களில் வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும் என்பதால் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் வெயில் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இதை தவிர்க்க அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். அதிகப்படியான புரதம் உள்ள உணவுகள் மற்றும் காலம் கடந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் மோர், இளநீர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும்.

கோடைக்காலத்தில் வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நேரமான மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வெளியே வரும் பட்சத்தில் குடையை எடுத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களிடம் உள்ள கால்நடைகளை நிழல்தரும் இடங்களில் நிறுத்தி அதிக நீர் வழங்கிட வேண்டும்.

வெயில் நேரங்களில் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் விட்டு செல்லக் கூடாது. வீட்டை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இரவில் ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும். கோடை காலங்களில் குறிப்பாக வெப்பம் அதிகமாக உள்ள நாட்களில் வளிமண்டல வெப்பம் மற்றும் உலர்ந்த வானிலை காரணமாக இயற்கையாகவே காட்டுத்தீ நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே கோடை காலங்களில் பொதுமக்கள் யாரும் காட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம். வெப்ப காற்றால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story