குமரகோட்டம் முருகன் கோவில் சிலை திருட்டு வழக்கில் அர்ச்சகர் கைது


குமரகோட்டம் முருகன் கோவில் சிலை திருட்டு வழக்கில் அர்ச்சகர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 4:45 AM IST (Updated: 5 April 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கச்சியப்பர் சிலை திருடிய வழக்கில் அந்த கோவிலின் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

கந்தபுராணம் அரங்கேறிய சிறப்பை உடையது காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவில்.

இந்த கோவிலில் கந்தபுராணத்தை அரங்கேற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு 7½ கிலோ எடையுள்ள வெண்கல சிலை கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சிலையின் உயரம் 28 செ.மீ. அகலம் 18 செ.மீ. ஆகும். இந்த கச்சியப்பர் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் கார்த்திக் (வயது 40) என்பவரிடம் விசாரித்ததில் அந்த சிலையை திருடி காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளத்தில் போட்டு விட்டதாக அவர் கூறினார்.

இதையொட்டி போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியோடு காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அந்த சிலை கிடைக்கவில்லை.

அர்ச்சகர் கார்த்திக் சிலையை திருடியதாக ஒத்துக்கொண்டதால் போலீசார் கார்த்திக்கை கைது செய்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதையொட்டி அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் காஞ்சீபுரம் சர்வதீர்த்த குளத்தில் சிலையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story