மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:30 AM IST (Updated: 5 April 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஓசூர், தர்மபுரியில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 342 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.லகுமய்யா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.சி.நஞ்சப்பா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திடீரென கட்சியினர் ரெயில் மீது ஏறியும், படுத்தவாறும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 260 பேர் கைது செய்யப்பட்டு, ஒரு தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நஞ்சப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டக்குழுவினர் தர்மபுரி வழியாக பெங்களூரு நோக்கி சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார், ரெயில் மறியலில் ஈடுபட்ட 82 பேரை கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 10 நிமிடம் காலதாமதமாக தர்மபுரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 

Next Story