மத்திய அரசை கண்டித்து சிவகங்கை உள்பட 4 இடங்களில் ரெயில் மறியல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


மத்திய அரசை கண்டித்து சிவகங்கை உள்பட 4 இடங்களில் ரெயில் மறியல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிவகங்கை, காரைக்குடி மற்றும் மானாமதுரையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காரைக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கான முயற்சியை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சீனிவாசன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜிகாந்தி, மாதர் சங்க பொறுப்பாளர் சேவாத்தாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்கள் மானாமதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 34 பேரை காரைக்குடி தெற்கு போலீசார் கைதுசெய்தனர்.

மானாமதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி தலைமையில் ஒன்றிய செயலாளர் முத்தையா உள்பட கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மானாமதுரை ரெயில்வே கேட் அருகே திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்ற பாசஞ்சர் ரெயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை மானாமதுரை போலீசார் கைதுசெய்தனர். இதேபோல் சிவகங்கையில் மாநில குழு உறுப்பினர் கோபால் தலைமையில் ரெயில் மறியல் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் கிருஷ்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், முருகேசன் நகர செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மறியல் செய்த 25 பேரை சிவகங்கை போலீசார் கைதுசெய்தனர்.

இதேபோல் கல்லல் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்குள்ள ரெயில் நிலையத்தில் மன்னார்குடியில் இருந்து மானாமதுரை சென்ற ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாவட்ட துணைச் செயலாளர் சாத்தையா, ஒன்றிய செயலாளர் குணாளன் உள்பட 24 பேரை போலீசார் கைதுசெய்தனர். 

Next Story