அரிசிகெரே தொகுதியில் டிக்கெட் வழங்க கோரி எடியூரப்பாவை சோமண்ணா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


அரிசிகெரே தொகுதியில் டிக்கெட் வழங்க கோரி எடியூரப்பாவை சோமண்ணா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 April 2018 4:45 AM IST (Updated: 5 April 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

சோமண்ணா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

அரிசிகெரே தொகுதியில் டிக்கெட் வழங்க கோரி எடியூரப்பாவை, சோமண்ணா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் மத்திய மந்திரியும், கர்நாடக மேல்-சபை உறுப்பினருமான பசவனகவுடா பட்டீல் யத்னால், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மல்லிகார்ஜுன கூபா உள்ளிட்டோர் எடியூரப்பா முன்னிலையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதாவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியதாவது:-

வருகிற 8-ந் தேதி விஜயாப்புரா, பசவ கல்யாணில் பா.ஜனதா மாநாடு நடக்கிறது. இதில் காங்கிரசை சேர்ந்த மாலிகையா குத்தேதார் எம்.எல்.ஏ. உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேருகிறார்கள். பா.ஜனதாவுக்கு இன்று(அதாவது நேற்று) நல்ல நாள். பசவனகவுடா பட்டீல் யத்னால், மல்லிகார்ஜுன கூபா, முன்னாள் மத்திய மந்திரி பசவராஜ் பட்டீல் அன்வரி ஆகியோர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர். அவர்களை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

பா.ஜனதா கட்சி பலம் அடைந்து வருகிறது. கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சி அடையவில்லை. சித்தராமையா பல்வேறு துறைகளில் மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்துள்ளார். இதனால் காங்கிரஸ் அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதனால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என எடியூரப்பா கூறினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து எடியூரப்பா மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏற முயற்சி செய்தார். அப்போது முன்னாள் மந்திரி சோமண்ணாவின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவை முற்றுகையிட்டு அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சோமண்ணாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சோமண்ணாவுக்கு டிக்கெட் வழங்கினால் அவரை வெற்றி பெற செய்வது தங்களின் கடமை என்றும் அவர்கள் கூறினர். இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எடியூரப்பா காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story