காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 5 April 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பஸ் நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேளம்பாக்கம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் இந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைத்தனர்.

அதே போன்று, திருப்போரூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கவைத்தனர். இந்த மறியல் போராட்டம் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அன்புச்செழியன் தலைமையில் நடந்தது.

இதில், திருப்போரூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ், ம.தி.மு.க. நகர செயலாளர் லோகு, காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் தியாகு மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் விசுவநாதன் தலைமையில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story