சேலத்தில் பரிதாபம்: கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
சேலத்தில் கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
சூரமங்கலம்,
சேலம் சிவதாபுரம் மெய்யன் நகரை சேர்ந்தவர் மோகன், வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடேசன்(வயது16). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வெங்கடேசனுக்கு இன்று(வியாழக்கிழமை) பிறந்த நாள் ஆகும். இதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து பரிசு பொருட்கள் வாங்கிவிட்டு வருவதாக நேற்று மதியம் வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார்.
ஆனால் வெங்கடேசன் நண்பர்களுடன் கடைக்கு செல்லாமல் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர். அப்போது நீச்சல் தெரியாததால் வெங்கடேசன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நண்பர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சூரமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றுக்குள் மூழ்கி இறந்த மாணவனின் உடலை மேலே மீட்டு வந்தனர்.
வெங்கடேசன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த வெங்கடேசன் கிணற்றுக்குள் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story