கடம்பத்தூர் ஊராட்சியில் பூட்டி கிடக்கும் ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை


கடம்பத்தூர் ஊராட்சியில் பூட்டி கிடக்கும் ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 April 2018 3:53 AM IST (Updated: 5 April 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் முதல் நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடம்பத்தூர், கசவநல்லாத்தூர், வெண்மனம்புதூர், வைசாலிநகர், வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர். நகர், ஆறுமுகநகர், செந்தில்நகர் என 20-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சியில் கடம்பத்தூர் ரெயில் நிலையம் உள்ளது. இங்குள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு தீர்வு காண கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது ரெயில் நிலையத்தின் 2 பகுதிகளிலும் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக கடம்பத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள். தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.19 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடமானது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்காமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் வீட்டுவரி, குடிநீர் வரி, கட்டிட வரைபட அனுமதி பெறுதல், தொழில் உரிம கட்டணம் செலுத்த முடியாமலும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கும் ஊராட்சி மன்ற கட்டிடத்தை பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக திறக்க வேண்டும்.

மேலும் அதிகாரிகள் பணியாற்றி பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story