அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்


அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட பழங்குடியின மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சரவணன், மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் சம்பத், நிர்வாகிகள் துளசி நாராயணன், குமரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வன உரிமை சட்டம் 2006-ஐ அமல்படுத்தி அனுபவ நிலம் மற்றும் வீட்டு மனைகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், பழங்குடி மக்களுக்கான காலி பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழங்குடியின மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர், வீட்டு மின் இணைப்பு, சுடுகாடு என அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

பட்டா உள்ள அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், விண்ணப்பித்த இருளர் இன மக்கள் அனைவருக்கும் காலதாமதமின்றி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இருளர் இன மக்களுக்கு கறவை மாடு, ஆடுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் சுந்தரவல்லியிடம் இது தொடர்பாக மனு அளிக்க சென்றனர்.

அப்போது அங்கு மனுக்களை வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அதிகாரிகளை கண்டித்து அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர்.

Next Story