முயல் கிராமம்
ஒகுனோஷிமா என்ற தீவின் பெயர் ரேபிட் ஐலண்ட் (முயல் தீவு) என்று மாறிவிட்டது.
இரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்யும் தீவாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒகுனோஷிமா. அந்தத் தீவு இன்று முயல்களின் சரணாலயமாக மாறி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல, ஒகுனோஷிமா என்ற தீவின் பெயர் ரேபிட் ஐலண்ட் (முயல் தீவு) என்றும் மாறிவிட்டது.
1929 முதல் 1945-ம் ஆண்டு வரை இந்த இடம், நச்சு வாயு தயாரிக்கக்கூடிய ரகசிய இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக 6 ஆயிரம் டன் நச்சு வாயு ராணுவத்தினரால் இங்கே உற்பத்தி செய்யப்பட்டது. வாயுவை பரி சோதனை செய்வதற்காக முயல்களை இங்கே கொண்டு வந்து, வளர்த்துள்ளனர். உலகப்போர் முடிந்ததும் எல்லாம் தலை கீழாக மாறியது. இங்குள்ள கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அங்கே இருந்த சில குடும்பங்களை வெளியே அனுப்பிவிட்டனர். ஏன்...? ஜப்பானின் வரைப்படத்தில் இருந்தே ஒகுனோஷியா தீவு மாயமாகியிருந்தது. ஆனால், முயல்கள் மட்டும் தொடர்ந்து அந்தத் தீவிலேயே இருந்தன என்கிறார்கள் சிலர். இன்னொரு கருத்தும்கூட உண்டு.
1971-ம் ஆண்டு இங்கே சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள், தாங்கள் கொண்டு வந்த 8 முயல்களை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார் களாம். அந்த முயல்கள் குட்டி போட்டுப் பெருகிவிட்டன என்கிறார்கள். முயல்கள் இந்தத் தீவுக்கு எப்படி வந்தன என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இன்று முயல்கள் ஒகுனோஷியா தீவை ஆட்சி செய்கின்றன. முயல்களின் அழகை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
தீவில் இறங்கி, முயல்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தால் மனிதர்களை அவை சூழ்ந்துகொண்டுவிடுமாம். அவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுமாம். சுற்றுலாப் பயணிகள் தரையில் உட்கார்ந்தால் மடி, தலை மீது ஏறி ஜாலியாக சேட்டைகள் செய்யுமாம். சிலரை அப்படியே படுக்க வைத்து, அவர்கள் மீது ஏறி விளையாடி மகிழுமாம்.
முயல்களின் இந்த அளவுக்கு அதிகமான பாசத்தைக் கண்டு குழந்தைகள்கூட பயப்படுவதில்லை. முயல்களால் எந்தப் பிரச்சினையும் மனிதர்களுக்கு கிடையாது அல்லவா? ஆனால், அப்படி விளையாடும்போது சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிடுமாம். அது மட்டும்தான் பிரச்சினை. உணவுப் பொருட்களுடன் யாராவது ஓடினால், நூற்றுக்கணக்கான முயல்கள் அவரைத் துரத்திக்கொண்டு வரும் காட்சியைப் பார்க்க அற்புதமாக இருக்குமாம்!
இந்த முயல் தீவில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் மட்டும் அனுமதி கிடையாதாம். முயல்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்புதான் முயல் தீவு பற்றி வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது. அதற்குள்ளாகவே முயல் தீவு பிரபலமாகிவிட்டது. குறைந்த காலத்திலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தீவை நோக்கி வரவழைத்துவிட்டன இந்த அழகிய முயல்கள்!
Related Tags :
Next Story