காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஊட்டியில் அரசு பஸ்களை மறித்து போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஊட்டியில் அரசு பஸ்களை மறித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 3:30 AM IST (Updated: 5 April 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ஊட்டியில் அரசு பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 156 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி, 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து கொடிகளை ஏந்தியவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காபி ஹவுஸ், மணிக்கூண்டு வழியாக ஏ.டி.சி. திடலுக்கு ஊர்வலமாக தொண்டர்கள் வந்தனர். போராட்டத்துக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க முடியாத தமிழக அரசு மற்றும் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென அவர்கள் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை, நகர செயலாளர் சங்கரலிங்கம் ஆகிய இருவரும் ஈரோடு செல்லும் அரசு பஸ் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்சை இயக்கக்கூடாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பஸ்சின் மீது ஏறி அவர்கள் இருவரையும் கீழே அழைத்து வந்தனர்.

ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி சுப்ரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை பொதுச்செயலாளர் இப்ராஹிம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊட்டி தொகுதி பொறுப்பாளர் கட்டாரி மற்றும் 14 பெண்கள் உள்பட 156 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் திடீரென மக்கள் கூட்டம் திரண்டது. உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சரக்கு லாரியில் இருந்து பொருட்களை இறக்க வேண்டாம் என்றும், கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் சிலர் கூறி அந்த சரக்கு லாரி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். கல் வீச்சில் லாரியின் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்சூர் பஜாரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ். பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி மணிக்கல் ஈஸ்வரன், கீழ்குந்தா பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.சின்னான், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி மாடக்கண்ணு, அவைத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், கரியமலை நாராயணன் உள்பட 25 தி.மு.க.வினரை மஞ்சூர் போலீசார் கைது செய்தனர். மஞ்சூர் அருகே பெங்கால் மட்டம் பஜாரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பில்லன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பாலக்கொலா ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன் உள்பட 27 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

எடக்காட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு அரசு பஸ் ஒன்று எமரால்டு வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இத்தலார் எல்லக்கண்டி முருகன் கோவில் அருகே வந்தபோது சாலையில் நடந்து சென்ற மர்ம ஆசாமி பஸ் மீது கல்வீசினான். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் சுனில் குமார் (வயது 35) மீதுகல் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். பின்னர் அந்த ஆசாமியை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விரட்டி சென்றனர். ஆனால் அந்த ஆசாமி தேயிலை தோட்டம் வழியாக தப்பி ஓடினான். இதுகுறித்து தகவல் அறிந்த மஞ்சூர் இன்ஸ்பெக்டர் அக்பர்கான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமசந்திரன் தலைமையில் காங்கிரஸ், பெரியார் திராவிட கழகம், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் கோத்தகிரி பஸ்நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்ஸ்போ செந்தில், சிவகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், பரத், மகேஷ், மன்னரசன், ஆனந்தராஜ் உள்பட 250 பேரை கைது செய்தனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோத்தகிரியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்தனர்.

Next Story