பட்டா வழங்கியும் நிலத்தை அளந்து கொடுக்க தாமதம்: தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வீட்டுமனை பட்டாவழங்கியும் நிலம் ஒதுக்காததால் கிராம மக்கள் கிணத்துக்கடவுதாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்களை தாசில்தார் சமரசம் செய்தார்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே உள்ள குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம் புதூர், தேவணாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் வருவாய்துறை சார்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் பட்டாவுக்கான நிலத்தை பயனாளிகளுக்கு ஒதுக்காமல் தாமதித்தனர். இது குறித்து கிராம மக்கள் பலமுறை வருவாய் துறையினரிடம் கூறியும் வருவாய்துறைசார்பில் அரசு கொடுத்த பட்டாவுக்குரிய நிலத்தை வழங்காததால் குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், தேவனாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்தபயனாளிகள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் அவர்கள் பட்டாவுக்குரியநிலத்தை வழங்க கோரி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையிட்ட பெண்களிடம் கிணத்துக்கடவு தாசில்தார் விமலா பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். அப்போது பட்டாவுக்கான நிலத்தை அளந்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து முற்றுகையிட்ட பெண்கள் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் 3 கிராமங்களைசேர்ந்த 171 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதற்கான நிலத்தை அளந்துதர நில அளவையர் வருவதாக கூறும் நாட்களில் நாங்கள் கூலி வேலைக்கு செல்வதை விட்டு விட்டு காத்திருப்போம். ஆனால் நிலத்தை அளக்க நில அளவையர் வர மாட்டார். தற்போது 4 மாதங்கள் ஆகியும் இன்று வரை நிலத்தை அளந்து தர எந்த நடவடிக்கையும் இல்லை. நிலத்தை அளக்க இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story