சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3,200 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3,200 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திண்டுக்கல்லில் நேற்று 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 8 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

திண்டுக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில், ஊர்வலமாக சென்ற போது போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை அவர்கள் சேதப்படுத்தினர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து, அதன் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். திண்டுக்கல் நகரில் ஒரு தனியார் பஸ் மற்றும் 7 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகியோர் உள்பட 3 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திண்டுக்கல்லில் ரெயில் மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்த 23 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story