புதுச்சேரியில் முழுஅடைப்பு; 6 பஸ்கள் மீது கல்வீச்சு


புதுச்சேரியில் முழுஅடைப்பு; 6 பஸ்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 6 April 2018 5:00 AM IST (Updated: 6 April 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதில் 6 பஸ்கள் கல்வீசி கண் ணாடிகள் உடைக்கப்பட்டன. மார்க்கெட்டுகள் வெறிச்சோடி கிடந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

புதுச்சேரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது என்று தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் போராட்டமாக நேற்று முன்தினம் ரெயில் மறியல் நடந்தது.

நேற்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து புதுவை நகரப்பகுதியில் நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. அதேபோல் குபேர் பஜாரும் செயல்படவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

புதுவையின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அதேபோல் அரசுக்கு சொந்தமான சாலைப்போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புது பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழக அரசு பஸ்கள் மட்டும் புதுச்சேரிக்குள் வந்து சென்றன. இந்தநிலையில் புதுவை பஸ் நிலையத்தில் கூடிய தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திராகாந்தி சிலை, நெல்லித்தோப்பு சிக்னல், முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டு 5 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதேபோல் தனியார் சுற்றுலா பஸ் ஒன்றும் கல்வீசி தாக்கப்பட்டது.

இதனால் சிறிது நேரம் தமிழக அரசு பஸ்களும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் புதுவை பஸ் நிலையத்திற்குள் வராமல் தமிழக அரசு பஸ்களை இயக்க தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் 100 அடி சாலை வழியாக மட்டும் குறைந்த எண்ணிக்கையில் அந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

காரமணிக்குப்பம் பகுதியில் உள்ள அரசு சார்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கியதால் அதன் மீது சிலர் தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. சில உணவகங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் இயங்கவில்லை. இதேபோல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசுப் பள்ளிகள் இயங்கினாலும் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். பஸ்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதற்கிடையே புதுவை பஸ் நிலையம் அருகே தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயயாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது சிலர் திடீரென அங்கு பிரதமர் மோடியின் கொடும்பாவியை கொண்டு வந்து கொளுத்தினார்கள். மோடியின் படத்தை செருப்பு, துடைப்பத்தால் அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் இருந்து மோடியின் கொடும்பாவி மற்றும் உருவ படத்தை பறிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பின் கொடும்பாவிக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர்.

அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். வழியில் பாஸ்போர்ட் சேவை மையம் திறந்திருப்பதை கண்டதும் அதனுள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி போராட்டக்காரரர்களை துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இதற்கு சிவா எம்.எல்.ஏ. மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு அமர்ந்து மத்திய அரசுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

சிறிது நேரத்தில் போலீசார் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். அதன்பின் அவர்கள் அண்ணாசிலை அருகே ரோட்டில் படுத்து சிவா எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையிலும் நிர்வாகிகள் காலை முதலே நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர். அப்போது திறந்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அடைக்குமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

Next Story