காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மதுரையில் 90 சதவீத கடைகள் அடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மதுரையில் 90 சதவீத கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 April 2018 4:00 AM IST (Updated: 6 April 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மதுரையில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால், பஸ்கள் ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.

மதுரை, 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறி வருகிறது.

இந்தநிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 5-ந்தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தி.மு.க. அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரையை பொறுத்தமட்டில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் பஸ் மறியல், ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதுபோல் ஓட்டல்கள், நகை கடைகள், துணி, பலசரக்கு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த கடை அடைப்பு போராட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை மாசிவீதிகள், சித்திரை வீதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இடங்களில் டீக்கடைகளும், பெட்டிகடைகள் மட்டுமே திறந்திருந்தன. மதுரையில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

போக்குவரத்து சேவையை பொறுத்தமட்டில் ஷேர் ஆட்டோ, ஆட்டோ, லாரி, வேன் போன்ற அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஓடின. அரசு பஸ்கள், தனியார், மினி பஸ்களும் இயக்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்களில் அன்றாடப்பணிகள் பாதிப்பில்லாமல் நடைபெற்றன. இதுபோல் மதுரை பூ மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது. மதுரை பரவை மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ்கள் இயக்கப்படுவது குறித்து, பெரியார் பஸ் நிலைய பணிமனை அதிகாரி ஒருவர் கூறும்போது, மதுரையில் பொன்மேனி, எல்லீஸ்நகர், பைபாஸ், திருப்பரங்குன்றம், புதூர், சோழவந்தான், செக்கானூரணி, திருமங்கலம், கல்லுப்பட்டி, மேலூர், திருப்புவனம், உசிலம்பட்டி, புதுக்குளம், சிப்காட் உள்ளிட்ட பணிமனைகள் இருக்கின்றன. இந்த பணிமனைகளில் இருந்து சுமார் 1150 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 90 சதவீத பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதுபோல் வெளியூர் செல்கின்ற பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.

கொட்டாம்பட்டியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு நடந்தது. மேலும் வியாபாரிகள் ஏராளமானோர் கொட்டாம்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து நத்தம் பிரிவு சாலை வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல் கருங்காலக்குடி சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்றது.

வாடிப்பட்டி பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலைய வணிக வளாகம், லாலாபஜார், சந்தைகேட் பகுதி, பேரூராட்சி அலுவலக பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், தாதம்பட்டி, நீரேத்தான் மந்தை வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

திருமங்கலம் நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடினாலும் கூட்டம் குறைவாக இருந்தது. பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அலங்காநல்லூர், கேட்டுகடை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. செக்கானூரணி பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

Next Story