காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ரெயில்-சாலை மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ரெயில்-சாலை மறியல்
x
தினத்தந்தி 6 April 2018 5:34 AM IST (Updated: 6 April 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசியல் கட்சியினர் ரெயில்-சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம் ஆகியோர் தலைமை தாங்கினர். தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சோம செல்வபாண்டியன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலுச்சாமி, காங்கிரஸ் நகர தலைவர் உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து மெயின் ரோடு வழியாக தேரடி திடலுக்கு ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட தி.மு.க. நகர செயலாளர் சங்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் மாடசாமி, ம.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் மாரிச்சாமி உள்ளிட்ட 49 பேரை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்து, சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

நெல்லை-தென்காசி ரோட்டில் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் பஸ்நிலையம் அருகே கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூங்கோதை எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட பூங்கோதை எம்.எல்.ஏ., மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் செல்லப்பா, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை உள்பட 189 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக, தென்காசி-நெல்லை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வள்ளியூரில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, மாவட்ட பொருளாளர் ஞானதிரவியம் ஆகியோர் தலைமையில் வள்ளியூர் பழைய பஸ்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சிவகுமார், மோன்குமாரராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர், கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் முகைதீன் அலி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 160 பெண்கள் உள்பட 626 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தென்காசி ரெயில் நிலையத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தென்காசியில் இருந்து மதுரை செல்லும் பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், அவைத்தலைவர் முத்துப்பாண்டி, நகர செயலாளர் சாதிர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, முன்னாள் யூனியன் தலைவர் சட்டநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சிக்கந்தர் நியாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அயூப்கான், ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், துணை தலைவர் சித்திக், செய்தி தொடர்பாளர் சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் மைதீன் சேட்கான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது ஆரிப் உள்பட 345 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தென்காசி போலீசார் கைது செய்தனர்.

கடையம் ரெயில் நிலையத்தில் நடந்த மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயிலை மறித்து காவிரி மேலாண்மை அமைக்கக்கோரி கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 8 பேரை கடையம் போலீசார் கைது செய்தனர்.

சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் தென்காசி-மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 21 பேரை சிவகிரி போலீசார் கைது செய்தனர். அம்பையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் ரெயில் அம்பைக்கு காலை 11.40 மணியளவில் வந்தது. உடனே தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் கட்சியினர் அந்த ரெயிலை மறித்தனர். பின்னர் அம்பை- பாபநாசம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் மறியலில் ஈடுபட்ட 170 பேரை கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம் மற்றும் சிவந்திபுரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆலங்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 17 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி, சிவகிரி, வாசுதேவநல்லூர், ராதாபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரில் தபால் நிலையத்தை தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தி.மு.க. சிறுபான்மை அணி துணை செயலாளர் ஜேசுராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், லட்சுமணன், பழனிகுமார், ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி, கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மாரியப்பன், ராதாகிருஷ்ணன் உள்பட 43 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story